மூசேவாலா கொலையில் சிக்கிய குற்றவாளிகள் நடிகர் சல்மான் கானை தீர்த்துக்கட்ட சதி: விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்

சண்டிகர்: பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள், நடிகர் சல்மான் கானையும் தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியிருந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூசேவாலா கடந்த மே மாதம் கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, பஞ்சாப் போலீசின் கேங்ஸ்டர் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கனடாவை சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி பிரார் உள்ளிட்ட குற்றவாளிகை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய, நேபாள எல்லையில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் காரிபாரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6வது முக்கிய குற்றவாளி தீபக் முண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கபில் பண்டிட், ரஜிந்தர் ஆகியோரை டெல்லி மற்றும் ஒன்றிய புலனாய்வு போலீசார் உதவியுடன் பஞ்சாப் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில், தீபக்கின் கூட்டாளி கபில் பண்டிட், நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பஞ்சாப் போலீஸ் டிஜிபி கவுரவ் யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கபில் பண்டிட் கடந்த ஆண்டு பரோலில் வெளிவந்து, தலைமறைவானவன். இவனும், தீபக் முண்டியும் மூசேவாலா கொலையைத் தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் தலைமறைவாக சுற்றி உள்ளனர். நேபாளம் வழியாக துபாய்க்கு தப்பி ஓட திட்டமிட்டிருந்த நிலையில் சிக்கி உள்ளனர். இதில், கபில் பண்டிட், கோல்டி பிரார் மற்றும் சம்பத் நெஹ்ரா மூலமாக லாரன்ஸ் பிஷ்னோய் தாதா கும்பலை அணுகி உள்ளார்.

அப்போதுதான், நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கபில் முதல் கட்ட விசாரணையில் கூறி உள்ளான். மேலும் மூசேவாலாவை கொல்ல பல சந்தர்ப்பங்களில் கபில் பண்டிட் வேவு பார்த்துள்ளான்’’ என்றார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூசேவாலா கொலை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: