×

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ராஜபக்சே ஆதிக்கம்; வீட்டுக்கு நேரடியாக சென்று கோத்தபயவை சந்தித்த ரணில்: மகிந்த மகனுக்கும் அமைச்சர் பதவி

கொழும்பு: வெளிநாட்டில் இருந்து திரும்பிய கோத்தபயவை, அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்று இலங்கை அதிபர் ரணில் சந்தித்து பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. அதோடு, முன்னாள் பிரதமர் மகிந்தவின் மகனுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், வெளிநாட்டுக்கு தப்பியோடி கோத்தபய, அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்பாகவே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்தவும், ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவி விலகினர்.

புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, சமீபத்தில் 37 பேருடன் அமைச்சரவை விரிவாக்கத்தை விரிவாக்கினார். இவர்களில் மகிந்தவின் அண்ணனான சமல் ராஜபக்சேவின் மகன் சசீந்திர ராஜபக்சே இடம் பெற்றார். இந்நிலையில், விரைவில் மேலும் 12 பேர் அமைச்சராக பதவியேற்க உள்ளனர். அதில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சேவுக்கு அமைச்சர் பதவி தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அரசியலில் இருந்து ராஜபக்சே குடும்பம் விரட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் மெதுவாக அரசில் நுழைந்து வருவது, இலங்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, வௌிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோத்தபய, சில தினங்களுக்கு மீண்டும் இலங்கை வந்தார். அவருக்கு அரசு சார்பில் பெரிய பங்களா கொடுக்கப்பட்டு, ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் நேரடி பார்வையில் இதெல்லாம் நடக்கிறது. இதனால், அவர் மீது மக்கள் ஏற்கனவே கொதிப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில், அதிபர் ரணில் ராஜபக்சே குடும்பத்தின் கையாள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், கோத்தபயவின் வீட்டுக்கு நேற்று நேரடியாக சென்று ரணில் சந்தித்து பேசினார்.

நாட்டின்  தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் போன்றவை குறித்து அவர்கள் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், கோத்தபயவின் உத்தரவுப்படி ரணில் கைபொம்மையாக  ஆடி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால், இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகி வருகிறது.

Tags : Rajapaksa ,Sri Lanka ,Ranil ,Gotabaya ,Mahinda , Rajapaksa reigns supreme again in Sri Lanka; Ranil went directly to the house and met Gotabaya: Mahinda's son is also a minister
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்