×

2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவால் தர போகும் தலைவர் யார்?: 65 சதவீத மக்கள் அதிர்ச்சி கருத்து

புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கப் போகும் தலைவராக யார் இருப்பார்? என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.ஒன்றியத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி, 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ.தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகிறார். ஆனால், இத்தேர்தலில் மோடி ஆட்சியை எப்படியாவது அகற்றி விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டி செயல்படுகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்கள் பலத்தை  திரட்டிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்டோர், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இத்தேர்தலில்  மோடிக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கப் போகும் தலைவர் யார்? என்பது குறித்து  ‘சி-வோட்டர்’ நிறுவனம், கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், ‘2024 தேர்தலில்  மோடிக்கு எந்த தலைவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்? கெஜ்ரிவாலா? அல்லது நிதிஷ் குமாரா? என்று கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற 65 சதவீதம் பேர்  கெஜ்ரிவால் பெயரை கூறியுள்ளனர். நிதிஷுக்கு ஆதரவாக 35 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.டெல்லியில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், சமீபத்தில் பஞ்சாப் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். அதோடு, குஜராத், இமாச்சலத்தில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Tags : PM Modi ,2024 Lok Sabha elections , Who will challenge PM Modi in 2024 Lok Sabha elections?: 65 percent of people are shocked
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!