துலீப் கோப்பை கிரிக்கெட்: மேற்கு - வட கிழக்கு டிரா

சென்னை: மேற்கு மண்டலம் - வட கிழக்கு மண்டலம் அணிகள் மோதிய துலீப் கோப்பை காலிறுதி ஆட்டம் டிராவில் முடிந்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வட கிழக்கு மண்டலம் பந்துவீச, மேற்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 590 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பிரித்வி 113, ஜெய்ஸ்வால் 228, கேப்டன் ரகானே 207* ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய வட கிழக்கு மண்டலம் 235 ரன்னில் சுருண்டது. அங்குர் மாலிக் அதிகபட்சமாக 81 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து, 355 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம், 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன் எடுத்திருந்தது.

திரிபாதி 5, தமோர் (0) நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தலா 24 ரன் எடுத்து திப்பு சங்மா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். சிராக் ஜனி 4 ரன்னில் வெளியேறினார். மேற்கு மண்டலம் 65 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஷாம்ஸ் முலானி - அதித் ஷேத் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 179 ரன் சேர்த்தது. முலானி 97 ரன் (115 பந்து, 12 பவுண்டரி) விளாசி கோந்தவுஜம் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மேற்கு மண்டலம் 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்திருந்த நிலையில் (64.3 ஓவர்) போட்டி டிராவில் முடிந்தது. அதித் 102 ரன் (101 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), உனத்கட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கிழக்கு - வடக்கு மண்டல அணிகளிடையே பாண்டிச்சேரியில் நடந்த துலீப் கோப்பை காலிறுதி ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிழக்கு மண்டலம் 397 மற்றும் 102/3; வடக்கு மண்டலம் 545.

Related Stories: