நெல்லை ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் ‘பிட்லைனுக்கு’ வந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் நேற்று திடீரென தடம் புரண்டது. பயணிகள் இல்லாததால் விபத்து தவிரக்கப்பட்டது. நெல்லை - பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் கடந்த 2018 ஜூலை மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. பாலருவி எக்ஸ்பிரஸ் 31 நிறுத்தங்களில் நின்று செல்வதோடு, 14 மணி நேரத்தில் 477 கிமீ தூரம் பயணித்து ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. பாலருவி எக்ஸ்பிரஸ் (எண் 16792) நேற்று அதிகாலை 4.45 மணிக்கு நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு 5.15 மணி அளவில் ‘பிட்லைனுக்கு’ புறப்பட்டு சென்றது.

இதற்காக தச்சநல்லூர் வரை சென்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ், பின்னோக்கி வந்து பிட்லைனில் நுழைந்தபோது பாலக்காடு ரயிலின் எஸ்4 பெட்டி மட்டும் திடீரென்று தடம் புரண்டது. இதையடுத்து ஊழியர்கள் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பயணிகள் யாரும் பெட்டிகளில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் தடம் புரண்டது குறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் நெல்லை ரயில் நிலைய பொறியியல் பிரிவு, மெக்கானிக் மற்றும் டிராபிக் பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு தடம் புரண்ட ரயிலின் பெட்டி சரி செய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

Related Stories: