நெல்லை ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

நெல்லை: நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் ‘பிட்லைனுக்கு’ வந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று திடீரென்று தடம் புரண்டது. ரயில் பெட்டிகளில் பயணிகள் இல்லாததால் விபத்து தவிரக்கப்பட்டது. நெல்லை - பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையை இறுதியாக வந்தடையும் ரயில்கள் பராமரிப்பு பணிக்காக ‘பிட்லைனு’க்கு அனுப்பப்படுவது வழக்கம். பாலக்காட்டிலிருந்து நேற்று மதியம் புறப்பட்ட பாலக்காடு எக்ஸ்பிரஸ் இன்று காலை 4.50 மணிக்கு நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் சுமார் 5.15 மணி அளவில் ‘பிட்லைனுக்கு’ புறப்பட்டது.

இதற்காக தச்சநல்லூர் வரை சென்ற பாலக்காடு எக்ஸ்பிரசின் இன்ஜின் மட்டும் கழற்றப்பட்டு, ரயிலின் பின்புறம் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் பிட்லைனை நோக்கி ரயில் சென்றது. அதிகாலை 5.30 மணி அளவில் பிட்லைனில் நுழைந்த பாலக்காடு ரயிலின் கடைசி பெட்டி மட்டும் திடீரென்று தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார், அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். நெல்லையில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட போது, பயணிகள் யாரும் பெட்டிகளில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாசஞ்சர் ரயில்கள் தாமதம்: பிட்லைனில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் ஏற்கனவே அதில் இருந்த காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் பாசஞ்சர் ரயிலும், 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலும் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்த ரயில்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர்.

Related Stories: