×

சென்னை விமானநிலையத்தில் பயணியிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் துபாய் செல்லும் விமானம் தயார்நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர், அந்த விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா செல்வதற்கு வந்திருந்தார். அவரை சோதனை செய்ததில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜனார்த்தனத்தை விமானத்துக்கு அனுப்பாமல், நிறுத்தி வைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அமெரிக்க நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும், கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் இருந்து இதே விமானத்தில் சென்னை வந்தபோது சாட்டிலைட் போனை எடுத்து வந்திருந்தேன். அப்போது என்னை சாட்டிலைட் போன் எடுத்து செல்வதற்கு சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் தடை செய்யவில்லை. அந்த போனுக்கு இந்தியாவில் தடை உள்ளது என்பதையும் கூறவில்லை. அதனால் இப்போது இங்கிருந்து அமெரிக்காவுக்கு எடுத்து செல்கிறேன் என ஜனார்த்தன் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த சாட்டிலைட் போனை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த போனை இந்திய அரசின் தடையை மீறி பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது சட்டப்படி குற்றம் எனக் கூறி, அந்த சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்தனர். இதைத் தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் சாட்டிலைட் போனுடன் ஜனார்த்தனை ஒப்படைத்தனர். அவர் இந்தியா வந்தபிறகு, சாட்டிலைட் போனில் யார், யாரிடம் பேசினார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்திய பாதுகாப்பு துறையில் மட்டுமே சாட்டிலைட் போனை பயன்படுத்த முடியும். மற்றபடி, பொதுமக்கள் யாரும் சாட்டிலைட் போன் பயன்படுத்தக்கூடாது. எனினும், தீவிரவாதிகள் ரகசியமாக சாட்டிலைட் போனை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதால், இந்தியாவில் சாட்டிலைட் போனுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. அதை மீறி பயன்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai airport , Satellite phone seized from passenger at Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்