×

மூத்த தெலுங்கு நடிகரும், மாஜி அமைச்சருமான உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ மரணம்: தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்

ஐதராபாத்: மூத்த தெலுங்கு நடிகரும், முன்னாள் அமைச்சருமான  உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் தெலுங்கு நடிகர் உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ (83), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ‘பாகுபலி’ திரைப்பட புகழ் பிரபாஸ் இவரது மருமகன் ஆவார்.  

உப்பலபதி கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு திரையுலக பிரபலங்கள்  உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டோலிவுட்டின் ‘ரெபெல் ஸ்டார்’ என்று மக்களால் அறியப்பட்ட  உப்பலபதி கிருஷ்ணம் ராஜு, கடந்த 50 ஆண்டுகளில் 180க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி விருதும், ‘தந்திர பாபராயுடு’ படத்திற்காக பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1940ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி பிறந்த உப்பலபதி கிருஷ்ணம் ராஜு, 1966ம் ஆண்டு ‘சிலக்கா கோரிங்கா’ படத்தின் மூலம் அறிமுகமானார். திரைத்துறையில் கொடிகட்டி பறந்த அவர், 1991ல் நரசாபுரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். 1999 லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக அதே தொகுதியில் வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Uppalapathy Krishnam Raju , Veteran Telugu actor and former minister Uppalapathy Krishnam Raju passes away: Leaders, screen celebrities mourn
× RELATED மூத்த தெலுங்கு நடிகரும், மாஜி...