×

ஒன்றிய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தால் துணை ஜனாதிபதி பதவி!: மேகாலயா ஆளுநர் மீண்டும் பரபரப்பு கருத்து

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தால் துணை ஜனாதிபதி பதவி வழங்குவதாக கூறினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், அவ்வப்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சைகளை கிளப்புவார். குறிப்பாக விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து அவர் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். ஆளும் ஒன்றிய அரசுக்கு ஆளுநர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், சத்ய பால் மாலிக்கின் கருத்துகள் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அரசுக்கு எதிராக பேசுவதை நான் நிறுத்தினால் துணை ஜனாதிபதி பதவி வழங்கப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது. அதற்காக பேசாமல் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், என்னால் பேசாமல் இருக்க முடியாது. மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்தது சரியானது தான். ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதை வரவேற்கிறேன்.

இன்றைய காலத்தில் இதுபோன்ற நடைபயணத்தை பெரும்பாலான தலைவர்கள் செய்வதில்லை. ராகுல்காந்தியின் நடைபயணம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள்தான் கூறவேண்டும். டெல்லியில் ராஜபாதையை கடமை பாதை என்று மாறகறியது தேவையற்றது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் எதிர்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவினர் சிலர் மீதும் ரெய்டுகள் நடத்தலாம்’ என்று அதிரடியாக கருத்துகளை தெரிவித்தார்.

Tags : Union Government ,Vice President ,Meghalaya Governor , If you don't speak against the Union Government, the post of Vice President!: Meghalaya Governor again sensational comment
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...