×

டெண்டர் விட்டு 6 மாதமாகியும் கரிக்கிலி சாலை சீரமைக்காதது ஏன்?: பொதுமக்கள் கேள்வி

மதுராந்தகம்: டெண்டர் விட்டு 6 மாதம் ஆனபிறகும் கரிக்கிலி சாலையை சீரமைக்காமல் இருப்பது ஏன் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கேள்வி கேட்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர், கொளத்தூர், கரிக்கிலி, பாலக்காடு மற்றும் வெள்ளபுத்தூர் வழியாக செல்லும் சுமார் ஒரு கி.மீ. ஊரக சாலை உள்ளது. இந்த சாலை 200 மீட்டர் சிமெண்ட் சாலையாகவும் 800 மீட்டர் தார்ச்சாலையாகவும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை தற்போது மோசமாக உள்ளது. சாலையில் பல பகுதிகளில் பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரட்டை மங்கலம் கிராமத்தில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்த பள்ளி மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட சாலை அமைக்க கடந்த 6 மாதத்துக்கு முன் டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை ஒப்பந்தம் எடுத்தவர் உடனடியாக அமைக்க அரசு உத்தரவிடவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karikili road , Why is Karikili road not repaired even after 6 months of tender?: Public question
× RELATED மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக...