ஊத்துக்கோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமப் பகுதியில் மிகப் பழமையான புகழ்பெற்ற பரதீஸ்வரர்-லோகாம்பிகை எனும் சிவன் கோயில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோயிலின் குருக்கள் வந்தபோது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த கோயில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ₹10 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் கோயில் நிர்வாகி நீலகண்டன் புகார் அளித்தார். போலீசார், கோயிலில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிவப்புநிற கோவணத்தை கட்டிக்கொண்டு, தன்னை மற்றவர்கள் பிடிக்காத வகையில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து, மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் சாமி சிலைகள் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: