×

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் மாற்றுப்பாதை அமைக்க அரசு முடிவு: அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் பைக் மூலம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு வசதியாக திருத்தணி- அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை அமைக்கப்பட்டு அதன் மூலம் வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மலைக்கோயிலுக்கு வாகனங்கள் மூலம் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வதால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர மலைக்கோயிலுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஒரே பாதைதான் உள்ளதால் கிருத்திகை மற்றும் முக்கிய விழா நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுவிடும். இதனால் மலைக்கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, கடந்த 2006 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது முருகன் மலைக்கோயிலுக்கு மாற்று பாதை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாற்று மலை பாதை திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் குழு அமைத்தது.

இந்த நிலையில், அதிகாரிகள் குழுவினர் திருத்தணி கோயில் துணை ஆணையர் விஜயா, பொறியாளர் வேல்முருகன், திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, வனத்துறை அதிகாரிகள் ஓம்குமார், அருள்நாதன், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் யாசர்அராபத், கிராம நிர்வாக அலுவலர் கவுரி, நில அளவையாளர் கோவிந்தராஜ்  ஆகியோர் நேற்று மலைக் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மலைக்கோயில் இருந்து அமிர்தாபுரம் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 மீட்டர் அகலத்துக்கு மலைப்பாதை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலையை அமைத்தால், கர்நாடகா மாநிலம், ஆந்திர மாநிலம் சித்தூர்  மாவட்டம் தமிழகத்தில் ராணிப்பேட்டை வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற 10க்கும் மேற்பட்ட  மாவட்டங்களில் இருந்து திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருத்தணி நகரத்துக்கு உள்ளே வராமல் மாற்று மலைப்பாதை வழியாக சென்று முருகப்பெருமானை தரிசிக்க முடியும்.


Tags : Government ,Tiritani Murugan , Govt decision to construct a detour at Tiruthani Murugan Hill Temple: Inspection by a team of officials
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...