திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது‌ அதிகரிப்பு: வேகமாக இயக்குவதால் விபத்தில் சிக்கி இறக்கும் பரிதாபம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளதுடன், வேகமாக இயக்குவதால் அடிக்கடி விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இப்போது வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சாலை போக்குவரத்தின் விதிமுறைகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. பெரும்பாலான வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

அதனால் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் இறப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. விபத்தில் இறப்பவர் மற்றும் படுகாயமடைபவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது அனைவரும் இயந்திர வாழ்க்கையில் உள்ளதால் வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது.

 இவர்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் ஒரே வாகனத்தில் மூன்று, நான்கு பேர் செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி நேரங்களில் மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனை பள்ளிகளும் கண்டு கொள்வதில்லை. சில மாணவர்கள் வாகனங்களை மறைவிடத்தில் வைத்து விட்டு பள்ளிக்கு செல்கின்றனர். அதனால் பள்ளி நிர்வாகம் இவர்களை கண்டறிந்து, யார் டூவீலர்களில் வருகிறார்களோ அவர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டிக்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் ரயில்வே மேம்பாலத்தில் ஒரே டூவீலரில் சென்ற போது அரசு பஸ் மோதி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் டூவீலர்கள் ஓட்டி விபத்தில் இறந்து உள்ளனர். இதுகுறித்து கண்ணன் என்பவர் தெரிவித்ததாவது, ‘தற்போது பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் டூவீலர்களில் எந்த பயமும் இன்றி பள்ளிக்கு வருகின்றனர்.

 சில பெற்றோர்கள் தங்களது பள்ளி குழந்தைகளையே வாகனத்தை ஓட்ட சொல்லி பின்னால் அமர்ந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடையாது, அவர்களால் விபத்து ஏற்பட்டால் எந்த நிதி உதவியும் கிடைக்காது. அதனால் மாணவர்கள் டூவீலர்களில் வருவதை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும்.  அவர்களிடம் வாகனத்தை கொடுக்காமல் பள்ளிக்கு செல்வதை கண்காணிக்க வேண்டும். மேலும் சில மாணவர்கள் அதிவேகமாகவும் செல்கின்றனர். அதனை தடுக்க போலீசார் தினமும் கண்காணிக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தெரிவித்ததாவது, ‘மாணவர்களிடம் டூவீலர்கள் கொடுப்பதை பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். அப்போது தான் வாகனங்கள் ஓட்டுவது தடுக்க முடியும். போலீஸ் நிர்வாகமும் கண்காணித்து டூவீலர்களில் செல்லும் மாணவர்கள் மீது‌ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி அளவில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: