ஊட்டி ஏரியில் ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் தகவல்

ஊட்டி:  ஊட்டியில் ரோப் கார் அமைப்பது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், விரைவில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அடங்கிய கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சுற்றுலாத்துறையும் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்கவும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டுக்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. எனினும், இந்த ஆய்வுகள் அப்படியே நின்று போய்விடுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அமைச்சராக இருந்த ஆ. ராசா ஊட்டியில் உள்ள தொட்டபெட்டாவில் இருந்து படகு இல்லத்திற்கு கேபிள் கார் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கோன ஆய்வுகளும் தனியார் நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு புதிய சுற்றுலா தலங்களும், சாகச விளையாட்டுக்கள் சுற்றுலாத்துறை சார்பில் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுற்றுலாத்துறையை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், திமுக., அரசு பொறுப்பேற்றவுடன் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக பல்வேறு சுற்றுலா தலங்களை உருவாக்கவும், பல்வேறு சாகச விளையாட்டுக்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் ரூ.3.15 கோடி செலவில் பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அதேபோல், சைக்கிள் விளையாட்டுக்களும் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கான ஆய்வுகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஊட்டி படகு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஊட்டி ஏரி மற்றும் படகு இல்லம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் டிஆர்., பஜார் பகுதியில் உள்ள அணையில் படகு சவாரி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் முடிந்த நிலையில், வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் இங்கு படகு தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஊட்டி ஏரியில் ஆய்வுகள் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஊட்டி படகு இல்லம் மற்றும் ஆழியாறு ஆகிய பகுதிகளில் கேபிள் கார் திட்டத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: