×

தொப்பூர் இரட்டை பாலம் அருகே 22,000 லிட்டர் ஆசிட்டுடன் கவிழ்ந்த டேங்கர் லாரி: 2 நாளாக நடந்த மீட்பு பணியால் போக்குவரத்து பாதிப்பு

நல்லம்பள்ளி: தொப்பூர் இரட்டை பாலம் அருகே, 22 ஆயிரம் லிட்டர் சல்பியூரிக் ஆசிட்டுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை, போலீசார் பத்திரமாக மீட்டனர். 2 நாளாக நடந்த பணியால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சல்பியூரிக் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி, 2 தினங்களுக்கு முன்பாக தாராபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை திருச்சி துறையூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(42) என்பவர் ஓட்டி வந்தார்.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் அருகே, இறக்கத்தில் கடந்த 8ம் தேதி இரவு வந்து கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள், விபத்தில் காயமடைந்த டிரைவரை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தி 3 கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் கவிழ்ந்த லாரியை தூக்கி நிறுத்தினர். ஆனால், டேங்கில் 22 ஆயிரம் லிட்டர் சல்பியூரிக் ஆசிட் இருந்ததால், விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து லாரியை இயக்கி அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த ஆசிட், தண்ணீர் பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டதாகும். எனவே, தொடர் மழையால் லாரியை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.

நேற்று மதியம், மற்றொரு டேங்கர் லாரியை வரவழைத்து, உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு, விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து சல்பியூரிக் ஆசிட்டை, பாதுகாப்பான முறையில் சுங்கச்சாவடி பணியாளர்கள் மாற்றினர். அப்போது, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Doppur Double Bridge , Toppur Twin Bridge, Overturned Tanker Truck with 22,000 Liters of Acid, Rescue Work Affects Traffic
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி