சென்னையில் மழைநீர் வடிகால் பணி முடிந்ததும் கட்டுமான கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்: நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஏற்கனவே உள்ள 2071 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 1350 கிலோ மீட்டர் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், முதல்வரால் அமைக்கப்பட்ட வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவின் பரிந்துரையின்படி பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2ன்  கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் 1.05 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3220 கோடி மதிப்பில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1714 கோடி மதிப்பில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது அமைச்சர், மேயர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையரால் நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார்.  

ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: ஒவ்வொரு பகுதியிலும் நடந்து வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன் அந்த மழைநீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றுவதை அந்தந்த வார்டு உதவி பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு அவை உடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், துணை ஆணையகள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: