எழும்பூரில் ஆவணங்களின்றி ஆட்டோவில் எடுத்து வந்த 20 கிலோ தங்கம் பறிமுதல்: போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கியது

சென்னை: எழும்பூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட 20 கிலோ நகைகள் சிக்கியது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விடிய, விடிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் ரவுண்டானா பகுதியில் நேற்று அதிகாலை எழும்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். அதில், 13 பார்சல்கள் இருந்தன. போலீசார் அவற்றை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள் இருந்தன. அதன் மொத்த எடை 20 கிலோ இருந்தது. இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, போலீசார் ஆட்டோவில் வந்த 2 பேரிடம் தங்கத்துக்கான உரிய ஆவணங்களை கேட்டனர்.  ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால்  போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த பரத்லால் (26), ராகுல் (21) என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் சென்னை சவுகார்பேட்டையில் தங்கி குல்தீப் ஷைனி என்பவர் நடத்தும் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் சேர்ந்து மும்பையில் இருந்து விமானத்தில் பார்சல் வடிவில் 20 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையம் வரை கடத்தி வந்து பின்னர் அங்கிருந்து சவுகார்பேட்டையில் தாங்கள் வேலை பார்க்கும் பார்சல் நிறுவனத்துக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தங்கம் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? மும்பையில் இருந்து 20 கிலோ தங்கத்தை அனுப்பி வைத்தது யார்? இங்கு யாருக்காக இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: