×

தேவாலய பெட்டகத்தில் ஒன்றரை ஆண்டாக ராணிக்காக காத்திருந்த கணவர் பிலிப் உடல்: எலிசபெத் விருப்பப்படி ஒரே நேரத்தில் அருகருகே அடக்கம்

லண்டன்: இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளாக இருந்து சாதனை படைத்த ராணி இரண்டாம் எலிசபெத், இருதினங்களுக்கு முன் தனது 96வது வயதில் இறந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவர் இறந்தார். இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, ராணியின் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் தொடங்கி உள்ளன. ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் இருந்து  ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் மாளிகைக்கு சாலை மார்க்கமாக நேற்று மாற்றப்பட்டது. இங்கு ஓய்வெடுக்கும் ராணியின் உடல், பின்னர் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத் தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட இருக்கின்றன. பிலிப் ஒன்றரை ஆண்டுக்கு முன் காலமானார். தனது மரணத்துக்குப் பிறகு, தனது உடலும், மன்னர் பிலிப்பின் உடலும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பம். அந்தளவுக்கு பிலிப்பை அவர் காதலித்தார். அவருடைய விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இறந்த பிலிப்பின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு பிறகு, தி ராயல் வால்ட்டில் உள்ள தேவாலயத்தில் அவருடைய உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.

ராணியின் விருப்பப்படி, அவருடைய இறுதி பயணமும், மன்னரின் இறுதிப் பயணமும் ஒரே இடத்தில் நிறைவு பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது. இவர்களின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடக்கும் என்று தெரிகிறது. விண்ட்ஸர் கோட்டையின் கிங் ஜார்ஜ் ஆறாவது மெமோரியல் சேப்பலில் ராணி எலிசபெத் - இளவரசர் பிலிப் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட இருக்கின்றன. இதற்காக, ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் இருந்து, மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது. இங்குதான் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெற்றோரான ஆறாம் ஜார்ஜ், ராணி எலிசபெத்தின் உடல்களும், இரண்டாம் ராணி எலிசபெத்தின் சகோதரி மார்கரெட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

* பொது விடுமுறை
இங்கிலாந்தில் ராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் தினத்தை, பொது அரசு விடுமுறையாக அறிவிப்பதற்கு மன்னர் சார்லஸ் நேற்று ஒப்புதல் வழங்கினார்.

* இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி, இன்று ஒருநாள் இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையொட்டி இன்று ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும்.
* இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார்.

* மோடியுடன் மட்டும் கையுறை அணியாமல் கைகுலுக்கியது ஏன்?
மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத், பொதுவாக வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது கையுறை அணிந்திருப்பது வழக்கம். அவர் தனது வாழ்நாளில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகிய 5 இந்திய பிரதமர்களை சந்தித்துள்ளார். இதேபோல், 14 அமெரிக்க அதிபர்களை சந்தித்துள்ளார். இந்த அனைத்து புகைப்படங்களிலும் ராணி எலிசபெத் கையுறை அணிந்தபடி உள்ளார். ஆனால், பிரதமர் மோடி உடனான சந்திப்பில் மட்டும் அவர் கையுறை அணிவதை தவிர்த்துள்ளார். மேலும், கையுறை அணியாமல் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கியும் உள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது மட்டும் ராணி ஏன் கையுறை அணியவில்லை என்பது யாரும் அறியாத மர்மமாகவே உள்ளது என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

* சோனியா இரங்கல்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பில், ‘உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக, எழுபது ஆண்டுகளாக நிலையான மற்றும் தொடர்ச்சியின் அடையாளமாக ராணி எலிசபெத் இருந்தார். ராணி எலிசபெத்தின் இந்திய வருகைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறுதியான உறவை அடையாளப்படுத்தியது. ராணி எலிசபெத்துடனான இந்தியாவின் தொடர்பு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’ என கூறி உள்ளார்.

Tags : Philip ,Queen ,Elizabeth , Body of husband Philip, who waited for the Queen for a year and a half in the church vault: buried side by side at Elizabeth's request
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!