×

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது: 5 எம்பி.க்களின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என்று 5 எம்பிக்களின் கோரிக்கையை தேர்தல் பணிக்குழு நிராகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடவில்லை என்றால், சசிதரூர் உட்பட பலர் போட்டியிட தயாராக உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி.க்களான சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்டோலோய், அப்துல் காலிக் ஆகிய 5 பேரும் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.

அதனால், மாநில காங்கிரஸ் கமிட்டியின் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். அந்த பட்டியலை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியலை வெளியிடும் கோரிக்கையை மதுசூதன் மிஸ்திரி நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘தலைவர் பதவிக்கான தேர்தல், காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகள்படி வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். வாக்காளர் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் விபரங்கள் வழங்கப்படும்,’ என தெரிவித்தார்.

Tags : Congress , Can't publish voter list for Congress president election: 5 MPs' plea rejected
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...