×

தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழியாக பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நேற்று  தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவில் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 தொடங்கி அக்.21ம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வராததால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, செப்.7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்.10ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. தமிழகம் முழுவதும் 110 மையங்களில் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய முதல்கட்ட கலந்தாய்வு நாளை வரை நடைபெறும். கட்-ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையிலும் நடக்கிறது. கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் என தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.

*நடப்பாண்டில் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு முதல் ரேங்க் தொடங்கி 14,524வது ரேங்க் வரை உள்ளவர்களுக்கு 12ம் தேதி வரை நடைபெறும். அந்த மாணவர்களுக்கு 15ம் தேதி சேர்க்கை ஆணை கொடுக்கப்படும். மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் ரூ.15,000 கட்டணம் செலுத்த  வேண்டும். அவ்வாறு பணம் கட்டாத மாணவர்களின் இடம் காலியிடமாக கருதப்பட்டு அடுத்த ரேங்கில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். 7.5% இட ஒதுக்கீட்டில்  6-12ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியருக்கு கலை மற்றும் பொறியியல்  கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவு பெரிய பலனை தந்துள்ளது. 23,321 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 12,982 மாணவர்களும் 10,339  மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்  11,150 பேருக்கு சீட் வழங்க முடியும். அண்ணா பல்கலையில் மட்டும் 76 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  நடப்பாண்டில் அரசு  கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பழைய கட்டண முறைப்படி மட்டுமே கட்டணத்தை பெற வேண்டும். கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Engineering Public Dispute ,Tamil Nadu , Engineering general category counseling has started online all over Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...