×

கூடுதல் மானிய டீசல் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசல் அளவை கூடுதலாக வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கியுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதையொட்டி நேற்று காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டத்திற்கு சகாயம் தலைமை வகித்தார்.

மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, எமரிட், பீட்டர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், கைப்பற்றிய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாதந்தோறும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலின் அளவை அதிகரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, வரும் 13ம் தேதி ராமேஸ்வரத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நிலையில், இரண்டு மீனவர் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த சங்கங்களின் பிரதிநிதிகளான என்.ஜே.போஸ், கார்ல் மார்க்கஸ் ஆகியோர், தங்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் படகுகள் வழக்கம்போல் கடலுக்கு செல்லும் என்று கூறினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக இன்று கடலுக்கு செல்லாததால் கடற்கரை வெறிச்சோடியது.

Tags : Rameswaram , Rameswaram fishermen on indefinite strike demanding additional diesel subsidy
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...