×

வருமான வரிச் சலுகை, ஹவாலா பணத்தை பதுக்க தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகள் ரூ1,000 கோடி முறைகேடு: தேர்தல் ஆணைய பரிந்துரையால் சுற்றிவளைக்கும் வருமானவரித்துறை

புதுடெல்லி: வருமான வரிச் சலுகை, ஹவாலா பணத்தை பதுக்க தொடங்கப்பட்ட ‘டுபாக்கூர்’ அரசியல் கட்சிகளை வருமான வரித்துறை சுற்றிவளைத்து ரெய்டு நடத்தி வருகிறது. மேற்கண்ட கட்சிகளுக்கு கிடைத்த ரூ. 1,000 கோடி நிதி ஆதாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில், எந்தவொரு குடிமகனும் சொந்தமாக அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது அவரது கட்சியிலிருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம்.

அவ்வாறு அறிவிக்கப்படும் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளை வைத்துள்ளது. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னரே அந்த கட்சியை மாநில கட்சியா? அல்லது தேசிய கட்சியா? என்பதை அங்கீகரிக்க முடியும். தொடர்ந்து தங்களுக்கு என்று நிரந்தர தேர்தல் சின்னத்தையும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியானது பெற முடியும். ஆனால் தேர்தல் ஆணையத்தில் தங்களது கட்சிகளை பதிவு செய்வதற்கு என்று பெரியளவில் சிறப்பு விதிகள் எதுவும் இல்லை. அதனால் சிலர் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நோக்கில், பொதுமக்களிடம் இருந்து நன்கொடை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரசியல் கட்சிகள் உருவாகின்றன. பொதுமக்களிடம் வசூலிக்கும் நன்கொடைக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பதும், நன்கொடைக்கு பதிலாக அரசியல் கட்சிகள் அளிக்கும் ரசீதை காட்டி நன்கொடை அளிப்பவருக்கும் வருமான வரி விலக்கு சலுகை ெபறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி பார்த்தால், நாடு முழுவதும் 2,100 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

அவற்றில் 55 கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு நிரந்தர சின்னம் இல்லை; கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பும் இல்லை. மேலும் அவர்களுக்கு கொள்கையும் இல்லை, வேட்பாளர் இல்லை. அவர்களின் நோக்கம் தங்களது அரசியல் கட்சியின் மூலம் ‘பணம் பார்ப்பது’ மட்டுமே. இதுபோன்ற அரசியல் கட்சிகள் சாதாரண பிளாட்பார்ம், பிளாட், குடிசைகளில் கூட நடத்தப்படுகின்றன. அந்த வகையில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் குறிப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் மீது வந்த புகாரின் அடிப்படையில் மும்பையின் சியோன் பகுதியில் உள்ள குடிசைப்பகுதிக்கு சென்றது.

அந்தப் பகுதியில் இருந்த குடிசையின் முகவரியில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியானது, சுமார் ​​100 கோடி ரூபாய்க்கு வருமான வரி விலக்கு கோரியிருந்தது. விசாரணையில், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஹவாலா கும்பலின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவதாக தெரியவந்தது. மேலும் இதுபோன்ற கட்சிகளை நடத்துபவர்களின் அனைத்து செலவுகளும் ஹவாலா கும்பலால் ஏற்கப்படுவதும் தெரியவந்தது. பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு ‘நிதி’ வழங்குதல், எஃப்சிஆர்ஏ மீறல் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் வருமான வரித்துறை பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தியதால்,

இதுபோன்ற சிறிய கட்சிகளின் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், அரியானா மற்றும் சில மாநிலங்களில் உள்ள 110க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது அரசியல் கட்சிகளுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்ட சில வழக்குகள் குறித்தும் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இதுபோன்ற அரசியல் கட்சிகள் மீதான வருமான வரித்துறை ரெய்டுகளைப் பொறுத்த வரையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உண்மையில், தேர்தல் ஆணையம் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து 198 அமைப்புகளை அதிரடியாக நீக்கியது. தேர்தல் ஆணைய விதிகள் மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் 2,174 பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தப் பட்டியலில், கட்சிகளின் நிதி தொடர்பான தகவல்களை வெளியிடாதது, நன்கொடையாளர்களின் முகவரிகளில் கோல்மால், அலுவலகப் பணியாளர்களின் பெயர்களை வெளியிடாதது ஆகியவை விசாரணைக்குள் அடங்கும். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் அதிகளவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு சுமார் ரூ.1,000 கோடி நன்கொடை  அளிக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பதிவு செய்யப்பட்ட  2,174 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடந்தன. ஜனநாயகத்திற்கும், நாட்டின் அரசாங்க கருவூலத்திற்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற ‘ஹவாலா’ கும்பலால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதுபோன்ற அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து வகையான விவரங்களையும் ஆண்டுதோறும் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இதற்கான கடுமையான சட்டவிதிகளை கொண்டு வரவேண்டும்’ என்று தெரிவித்தன.

5 ஆண்டில் ரூ.9,208 கோடி
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு முதல் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் ரூ.9,208 கோடி நன்கொடை பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் விற்கப்பட்டுள்ளன. அதில் ரூ.1987.55 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில் அதாவது 2018ல் ரூ.1056 கோடி, 2019ல் ரூ.5091 கோடி, 2020ல் ரூ.363 கோடி, 2021ல் ரூ.1501 கோடி, 2022ல் ரூ.1213.26 கோடி என்றளவில் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.

நிதி முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது  தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது. கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பலமுறை கடிதம் எழுதியும், ஒன்றிய அரசு இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடை பத்திரம்தான் காரணம்!
கடந்த இருபது ஆண்டுகளில் அரசியல் கட்சிகளின் பதிவு 300 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் 694 அரசியல் கட்சிகள் இருந்தன; ஆனால் தற்போது சுமார் 2,800 ஆக உயர்ந்துள்ளன. அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம், தேர்தல் நன்கொடை பத்திரங்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என்பதால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் வழங்கப்படும் தேர்தல் பத்திரங்களில் பலர் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குகின்றனர். இந்த நன்கொடை விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னம் கிடைக்காது!
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29ஏ மற்றும் சி-இன் கீழ் தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் 1961-இன் விதி 59பி-இன் கீழ் நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதற்காகத்தான் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு விதி எண் 29சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய கடிதம் கிடைத்து 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை சமர்பிக்காவிட்டால், மேற்கண்ட கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Election Commission , Political parties started hoarding income tax concession, hawala money Rs 1,000 crore malpractice: Income tax department to round up on Election Commission recommendation
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...