×

சாத்தான்குளம் அருகே பரபரப்பு; கல் குவாரி லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்: பொதுமக்கள், பஸ் பயணிகள் பாதிப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், மீரான்குளம், தேர்க்கன்குளம் பகுதி சுற்று வட்டாரங்களில் சுமார் 8 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நெல்லை மாவட்டத்திற்கு நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் குண்டு கற்கள், ஜல்லி கற்கள் விதிமுறை மீறி எடுத்து செல்லப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவான 20 டன்னுக்கு பதிலாக 45 டன் வரை கற்கள் கனரக வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் எடுத்து  செல்லப்படுவதால் கிராம சாலைகள் சேதமடைவதுடன் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (செப்.10) காலை முனைஞ்சிப்பட்டி மீரான்குளம் மற்றும் சிந்தாமணி வழியாக 4 கனரக வாகனங்கள் கல்குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றி புறப்பட்டு சென்றன. இதுபோல் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் வழியாக உடன்குடி செல்லும் அரசு பஸ் மற்றும் நெல்லையில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசு பஸ் வழக்கம்போல் புறப்பட்டு வந்தன. சாத்தான்குளம் மீரான்குளம் மற்றும் சிந்தாமணி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கல்குவாரி லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கல் குவாரி லாரி டிரைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கல்குவாரி டிரைவர்கள் வாகனத்தை எடுக்காமல் நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் பயணிகள்,  குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து மூலைக்கரைப்பட்டி எஸ்.ஐ. ஆழ்வார், சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் ஜேசுமிக்கேல் ஆகியோர் சம்பவ இடம்சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விதிமுறைமீறி கல் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து  அதிக பாரம் ஏற்றிச்சென்ற 4 கனரக வாகனங்கள் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Tags : Satankulam ,Nadurode , Bustle near Satankulam; Quarry trucks stop in the middle of the road, drivers argue: public, bus passengers affected
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்