புதுப்பட்டினம் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் சாலையில் நிறுத்தப்படும் பஸ்கள்: புதிய பஸ் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் உள்ள பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால், சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகிறது. புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் பகுதியில் இருந்து வாயலூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர், நெரும்பூர் வழியாகவும், விட்டிலாபுரம், லட்டூர் வழியாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் புதுப்பட்டினம் பகுதியில் நின்று செல்வதற்காக பஜார் பகுதியில் சிறிய பஸ் நிலையம் உள்ளது.

இங்கு பஸ்களை நிறுத்த போதிய வசதி இல்லை. ஒரு பஸ் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் விரிவான நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்எல்ஏ உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: