செம்பரம்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க குவியும் இளைஞர்கள்

குன்றத்தூர்: சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த கனமழை காரணமாக இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஏரியில் 22.25 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி, கடல் போல் விரிந்து இயற்கை எழிலுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த ஏரி சிறந்த குடிநீர் ஆதாரமாக மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற பகுதிகளான குன்றத்தூர், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் சிறந்த வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் வலை மற்றும் தூண்டில்கள் மூலம் மீன் பிடித்து, அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இயற்கை முறையில் ஏரியில் வளரும் மீன்களுக்கு ருசி அதிகம் என்பதால், வார விடுமுறை நாட்களில் சென்னை நகர மக்களும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று, குறைந்த விலைக்கு பெரிய பெரிய மீன்களை வாங்கி வந்து ருசித்து மகிழ்கின்றனர்.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் வலைகளுடன் வந்து குவிகின்றனர். அவர்களும் மீன்பிடித்து ₹100 முதல் ₹500 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் குடும்ப தேவைக்கான வருவாய் கணிசமாக கிடைத்து வருவதாக அந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: