×

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பின் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற பின் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற  வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தலைமையில், ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் ஏற்கனவே உள்ள 2071  கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 1350 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால்களில் வண்டல்கள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பட்ட சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளின் படி பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2 ன்  கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும்,

வெள்ள நிவாரண நிதியின் கீழ்  ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் 1.05 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில்  ரூ.3220 கோடி மதிப்பில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ்  கோவளம் வடிநில பகுதிகளில்  ரூ.1714 கோடி மதிப்பில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதிஉதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மேற்குறிப்பிட்ட மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்பொழுது மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மேயர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரால் அவ்வப்பொழுது நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், முதன்மை செயலாளர் / ஆணையாளர் திரு. ககன்தீப் சிங்பேடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 09.09.2022 அன்று ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள், ஒவ்வொரு வார்டிற்கும் உட்பட்ட உதவி பொறியாளர்களிடம் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள வரைபடங்களின் மூலமாக விவரமாக கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வரும் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன் அந்த மழை நீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்றுவதை அந்தந்த வார்டு உதவி பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளின் போது வண்டல்கள் அகற்றப்பட்டு அவை உடனடியாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும்,

குறைந்த அளவு  குதிரை திறன் கொண்ட 200 மோட்டார் பம்புகளும் என மொத்தம் 400 மோட்டார் பம்புகள் உள்ளன. இந்த இடங்களில் மழைநீர் வெளியேற்றும் மின் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைகளில் மழைநீர் சேகரமாகும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்றவும், மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகளை உடனடியாக முன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அவற்றை  இயக்கி சரிபார்த்துக் கொள்ளவும், அனைத்து வகையான உபகரணங்களையும் முன் பராமரிப்பு செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள் (Silt Catch Pit) மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் இருந்து மழைநீர் வடிகால்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்களில்  (Chute pipe) அடைப்புகள் ஏதுமின்றி மழை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மழைநீர் வடிகால்களும்  நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் (Disposal Point) தங்கு தடை இன்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டினை தயார் செய்யவும் அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., அவர்களும், முதன்மை செயலாளர் / ஆணையாளர் திரு. ககன்தீப் சிங்பேடி, இ.ஆ.ப., அவர்களும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு. எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்), திரு. விஷூமஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), திருமதி டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி), திரு. எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), திரு. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), தலைமை பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Chennai ,Corporation of the Corporation , Construction waste in drains should be removed immediately after completion of rainwater drainage works in Chennai: Corporation Commissioner orders
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...