எனது தாயாரின் வழியில், சட்டப்படி எனது கடமையை ஆற்றுவேன்: பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ் உரை

லண்டன்:  பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை அடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் மரணமடைந்த ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவரது மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்து நாடும் சோகத்தில் மூழ்கி உள்ளது. இங்கிலாந்து அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. ராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பக்கிம்ஹாம் அரண்மனை முன்பாக நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று மலர் கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

அடுத்த 10 நாட்களுக்கு நடக்கும் ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் முறைப்படி நேற்று தொடங்கின. 10 நாட்களுக்கு பிறகு அவர் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதே போல், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஹைடி பூங்காவில் ராணியின் வயதுப்படி, 96 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. ராணியின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்தின் மன்னராகிறார் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சார்லஸ் பிரிட்டன் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து உறுதி மொழியை வாசித்து மன்னர் சார்லஸ் கையொப்பமிட்டார். அந்தரங்க சபையில், மன்னர் சார்லஸ் தனது பிரகடனத்தை அறிவித்தார்.

முடிசூட்டு விழாவில் முன்னாள் பிரதமர்கள் தெரெசா மே, போரிஸ் ஜான்சன், தற்போதையை பிரதமர் லிஸ் ட்ரெஸ் மற்றும் அனைத்து எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இங்கிலாந்து வரலாற்றில் அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பின்னர் உரையாற்றிய அவர்; எனது தாயாரின் வழியில், சட்டப்படி எனது கடமையை ஆற்றுவேன். அரச குடும்பத்தின் பாரம்பரியங்களை காப்பாற்றுவேன். ஸ்காட் லாந்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்த உறுதிமொழி ஏற்கிறேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: