×

திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு, மலையே மகேசனாக காட்சியளிப்பதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.22 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.35 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. நேற்று இரவு விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.

இந்நிலையில் 2வது நாளான இன்றும் அதிகளவு பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை வரை இருப்பதாலும் 2 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதாலும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை பகல் நேரத்தில் மேலும் அதிகரித்தது. மேலும் இன்று பகலில் வெயில் அதிகம் இல்லாமல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் எவ்வித சிரமமும் இன்றி அதிகளவு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Tags : Thiruvandamalaya , Today is the 2nd day of devotees' girivalam in Tiruvannamalai
× RELATED திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு