×

1989ல் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது விரிவாக்க பணிக்காக காத்திருக்கும் வேடசந்தூர் பஸ்நிலையம்

*2 ஏக்கர் நிலத்தில் விரைவில் துவக்கம்

வேடசந்தூர் : வேடசந்தூரில்  1989ம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியின்போது திறக்கப்பட்ட பஸ் நிலையம் 2  ஏக்கர் நிலத்தில் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம்  கையகப்படுத்தும் பணி நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.வேடசந்தூர் பஸ்  நிலையம் 1989ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அன்றைய திமுக ஆட்சி காலத்தில்  திறக்கப்பட்டது.

 அதன்பிறகு இன்று வரை பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்  மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாத  நிலை என்பதால் பஸ்கள் அனைத்தும் அங்கு நிறுத்தப்படாத நிலை உருவானது.  திண்டுக்கல் மாவட்டத்தில் குறைவான பரப்பளவில் உள்ள பேரூராட்சி என்ற நிலை  வேடசந்தூருக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி தலைவராக மேகலா  கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன் வேடசந்தூர் பேரூராட்சி விரிவாக்கம்  செய்யப்பட வேண்டும் என்றும், அதில் நாகம்பட்டி, தட்டாரப்பட்டி,  வி.புதுக்கோட்டை ஆகிய கிராம பகுதிகளை இணைக்க வேண்டும் என்றும் முதல்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேடசந்தூர் மக்கள்தொகை சுமார் 16,500 என்ற  அளவிலும் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 500 என்ற நிலையிலும் உள்ளது. இதனால்  பேரூராட்சியை தரம் உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த  பேரூராட்சியை அடுத்துள்ள கிராம ஊராட்சி பகுதிகளை பேரூராட்சியோடு இணைத்தால்  நகராட்சியாக மாற்றப்பட அதிக வாய்ப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. வேடசந்தூர்  பகுதிக்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய 120 பஸ்கள் ஆத்துமேடு பகுதி  வழியாகவும், புறவழிச்சாலை வழியாகவும் பஸ் நிலையம் வராமல் சென்று  கொண்டுள்ளன.

இதனால் வேடசந்தூரில் இருந்து நீண்ட தூர பஸ்களுக்கு செல்ல  வேண்டிய பயணிகள் பஸ் நிலையத்திலிருந்து ஆத்துமேடு பகுதிக்கு சென்று பின்  அங்கிருந்து வெளியூர் பேருந்துகளை பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் சில  நேரங்களில் பஸ்களை தவறவிட்டு நீண்ட நேரம் காத்திருந்து அடுத்த பஸ்சில்  செல்ல வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் கடந்த அதிமுக  ஆட்சியில் பஸ்நிலைய கட்டிடங்களில் முறையான பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அவை பலத்த சேதம் அடைந்த நிலையில் காட்சி  அளிக்கின்றன.

மேலும் முன்பு இருந்த மக்கள்தொகையுடன், தற்போதைய மக்கள்  தொகையை ஒப்பிடும் நிலையில் அதிக வித்தியாசம் உள்ளது. இதனால் அதிக  எண்ணிக்கையில் பஸ்களை இயக்கும் வகையில் பஸ் நிலையத்தை கூடுதல் வசதிகளுடன்  விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து  பாஸ்கரன் என்பவர் கூறும்போது, ‘வேடசந்தூரில் கிராம பகுதிகளுக்கு செல்லும்  டவுன் பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. வெளியூர்  செல்லக்கூடிய பஸ்கள் எதுவும் பஸ் நிலையம் வருவதில்லை. இதற்கு பஸ்  நிலையத்தில் போதிய வசதி இல்லாததே காரணமாகும். மேலும் பஸ் நிலையத்திற்கு  அதிக இட வசதி ஏற்படுத்தி கட்டிடங்களையும், கடைகளையும் அதிகளவில்  உருவாக்கினால் புறநகர் பேருந்துகளும் இங்கு வந்துசெல்லும்.

இதனால்  பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்களும் அதிகம் பயனடைவார்கள்’ என்றார். இப்பிரச்னை  குறித்து பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன் கூறும்போது, ‘பேரூராட்சி  தலைவராக நான் பொறுப்பேற்றபோது, பஸ் நிலைய விரிவாக்க பணி என்பது பெயரளவில்  இருந்தது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்  நிலை உருவானது. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் உதவியுடன் சென்னை நில  நிர்வாக ஆணையம் வரை சென்று அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. தற்போதைய  நிலையில் நில நிர்வாக ஆணையம் ஒப்புதல் வழங்கினால் பஸ் நிலைய விரிவாக்க  பணிகளை உடனடியாக துவங்கும் நிலையில் இருக்கிறோம்.

எங்கள்  முடிவின்படி பஸ் நிலையம் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம்  செய்யப்படும். அதற்காக அருகில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான இடம்  கையகப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. அதேபோல் பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் அதிக எண்ணிக்கையில் கடைகளும் கட்டப்படும். ஒட்டுமொத்தமாக  வேடசந்தூரில் விரைவில் நவீன மயமாக்கப்பட்ட பஸ் நிலையம் உருவாகும். இதற்கான  பணிகளை விரைவில் தொடங்குவோம். முதற்கட்டமாக பஸ் நிலைய கட்டிட விரிவாக்க  பணிகளுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் ரூ.5 ேகாடி முதல் ரூ.6 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறும்’ என்றார்.

பொதுமக்கள் நம்பிக்கை

வேடசந்தூர்  பஸ் நிலையம் கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் அன்றைய எம்பி சேனாதிபதி  கவுண்டர்,  எம்எல்ஏ முத்துச்சாமி ஆகியோர் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டு  திறக்கப்பட்டது அடுத்ததாக மக்கள் விரிவாக்க பணிகள் எப்போது நடைபெறும் என  காத்திருந்தனர். இந்நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் விரிவாக்க  பணிகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில்  தொடங்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Tags : vadasantur bus station ,jazhagam , Vedasandur,New BusStand,People Request
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...