×

மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட அறிக்கை: சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மற்றொரு மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.நீட் நுழைவுத்தேர்வு  திணிக்கப்பட்ட 2017ம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப்போக்கி கொண்ட நிலையில் , மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பா.ஜ அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது. பா.ஜ அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Vigo , Vaiko appeals to students to give up suicidal thoughts
× RELATED மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு: வைகோ கண்டனம்