×

நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால் மாணவர்களுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சி அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 51.20 சதவீதம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10 சதவீதம் குறைவு. நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஹைடெக் ஆய்வகங்கள் நவீனமானவை அல்ல. கணினி வசதி கொண்ட ஆய்வகங்கள்தான். அவற்றில் மாணவர்கள் தாங்களாகவே இணையத்தில் உள்ள தகவல்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மாதிரி பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சியும் கூட சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படவில்லை.

மாறாக அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டுதான் நடத்தப்படுகிறது. வழக்கமான பணிச்சுமையுடன் கூடுதலாக இந்த பயிற்சியையும் வழங்குவது அவர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் பள்ளிக்கல்வி துறை வழங்கிய பயிற்சிகள் பயனளிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. அதே நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் வரை அரசு பள்ளி மாணவர்கள் அதில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்க முடியாது. அவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டுமானால் அதற்கு தனியார் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படுவதற்கு இணையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

Tags : Passing rate in NEET is low, private coaching institutes need parallel training: Anbumani demands
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...