அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி டெல்லி பாஜ தலைமைக்கு குவியும் புகார்கள்: தனித்து போட்டியால் உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வ நேரிட்டது

* அடுத்த தேர்தலில் போட்டியிட ஒருவர் கூட முன்வர மாட்டார்கள் என பாஜவினர் ஆதங்கம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். கட்சியை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றி வருகிறார் என அவருக்கு எதிராக டெல்லி பாஜ தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அண்ணாமலையை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பாஜவில் போட்டியிட ஒருவர் கூட முன்வரமாட்டார்கள் என்று கட்சியினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

அவர், பாஜ தலைவரானதில் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் நடத்துவது இல்லை. தான் சொல்வது தான் சரி என்று பேசிக்கொண்டிருக்கிறார். சீனியர்களை மதிக்காததால் அண்ணாமலைக்கு எதிராக அனைத்து தலைவர்களும் கொதித்து போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை மறைப்பதற்காக எதிர்க்கட்சி அரசியல் செய்கிறேன் என்று கூறி வருகிறார். அதிமுகவை விட நாங்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று சொல்லி சமாளித்து வருகிறார் என மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பாஜ மூத்த தலைவர்கள் கூறியதாவது: உண்மையில் பாஜ எதிர்க்கட்சியாக எந்த வகையிலும் இல்லை. சமூக வலைத்தளத்தில் மட்டும்தான் ஆக்டிவாக இருக்கிறார் அண்ணாமலை. எதிர்க்கட்சியாக எந்த வகையிலும் பாஜ ஆக்டிவாக இல்லை. தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கும்போது, பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறார், காசு வாங்கிவிட்டாய் என அவமானப்படுத்துகிறார். இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல தனது சொந்த கட்சிக்காரர்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரிகள் எல்லாரையும் சந்தேகப்படுவது வழக்கமானதுதான். பழைய போலீஸ் அண்ணாமலைக்கும் அந்த வழக்கம் அப்படியே இருக்கிறது. கட்சிக்காரர்களை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார். அவரது டிரைவரை கூட சந்தேகப்படுகிறார். தமிழக பாஜ உண்மையான எதிர்க்கட்சியாக இல்லை. திடீரென ஆளுங்கட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டை சொல்வது. நான் ஆதாரத்தை வெளியிடுவேன் என்று சொல்வது. ஆனால் எந்த ஆதாரத்தையும் வெளியிடுவது இல்லை. இருந்தால்தானே கொடுக்க முடியும். சும்மா வெற்று அறிக்கை அரசியலோடு நிற்கிறார்.

வீண் பரபரப்புக்காக குற்றச்சாட்ைட சொல்லி வருகிறார். அதன் பின்னர் எதுவுமே பண்ணாமல் விட்டுவிடுவது. இதனால், அவர் சொல்வது எல்லாமே ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்றுதான் எல்லாருக்கும் தெரிகிறது. இதனால்தான் கட்சியில் அவருக்கு நாங்கள் அட்டக்கத்தி அண்ணாமலை என்று பெயர் வைத்துள்ளோம். அவர் மீதான நம்பகத்தன்மை கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, மக்களிடமும் இல்லாமல் போய் விட்டது. வெறும்  வாய்ச்சவடால் பேர்வழி அண்ணாமலையாக இருக்கிறார்.

 பல நாட்களாக, பல வருடமாக கட்சியை வளர்க்க போராடிய தலைவர்களை ஏளனமாக பேசுவதுதான் இவரது வாடிக்கையாக இருக்கிறது. அதே நேரத்தில் பாஜவில் தனிமனித துதிபாடு தான் அதிகமாக இருக்கிறது. இவரைப்பற்றி புகழ்ந்து பேசுபவர்களையும், ஆஹா, ஓகோ என்று பேசுபவர்களுக்கு மட்டும்தான் கட்சியில் பதவி இருக்கிறது. மற்ற அனைவரையும் டம்மி பண்ணி விட்டார். இவரே இவரை புரோமோட் பண்ணுவதற்கு தனியாக ஒரு ஐடி விங்கை வைத்திருக்கிறார். அதில் இவருக்கு ஆர்மி என இவரே கிரியேட் பண்ணியிருக்கிறார்.

பாஜ கட்சிக்கு வந்தவுடன் மாநில தலைவர் பதவி கொடுத்ததாலும், கட்சியை பற்றி ஒன்றும் தெரியாமல், கட்சியின் முக்கிய தலைவராக உள்ள சந்தோஷை பிடித்து வந்ததாலும், கட்சியினர் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை அட்ஜஸ்ட் செய்துகொண்டார்கள். கட்சியில் பொதுக்கூட்டத்தை பெரிய அளவில் பணம் வசூல் பண்ணி தான் பண்றாங்க. இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை குறிப்பிட்ட டார்க்கெட் பிக்ஸ் பண்ணி வசூல் பண்ண செய்கிறார்கள். பாஜவுக்கு தமிழகத்தில் யாரும் பணம் கொடுப்பது இல்லை. பெரிய தொழிலதிபர்கள் வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்க துறைக்கு பயந்து பணம் கொடுப்பார்கள். கீழ் அளவில் ஒன்றிய செயலாளர்களிடம் யார் பணம் கொடுப்பார்கள். யாரும் பணம் கொடுப்பது இல்லை.

இதனால், அவர்கள் சொந்த காசை கையில் இருந்து போட்டு, இருக்கிற சொத்தை அடமானம் வைத்து விட்டு, பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தை சேர்க்க வேண்டியது உள்ளது. இவர் இருந்தால் கூட்டம் தனிப்பட்ட முறையில் வருகிறது என்பதை காட்டுவதற்கு தான் இது மாதிரி பண்ணுவது. ஒவ்வொருவருக்கும் டார்கெட் பிக்ஸ் பண்ணி, ஓட்டலில் இருந்து விட்டு கூட்டம் இருந்தால்தான் வருவேன் என்று சொல்வார். கூட்டம் இல்லாவிட்டால் வர மறுக்கிறார். கூட்டம் அதிகமாக சேர்ந்த பிறகு தான் கூட்டத்திற்கு அண்ணாமலை வருகிறார் என்ற ஆதங்கமும் கட்சியினரிடையே இருந்து வருகிறது.

 அண்ணாமலையின் இந்த ஓவர் அட்ராசிட்டி பற்றி தலைமைக்கு புகார்கள் பறந்ததால் தான், இப்போது தமிழக பாஜவில் இரட்டை தலைமையை டெல்லி மேலிடம் கொண்டு வந்துள்ளது. அதன் விளைவு தான் தமிழக பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு தனியாக அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நான் சொல்லி தான் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு அலுவலகம் வழங்கப்பட்டது என்று வெளியே அண்ணாமலை கூறி வருகிறார். எல்.முருகனை கட்சிக்காரர்கள் பார்த்து விடுவார்களோ என அண்ணாமலை பதற்றப்படுகிறார். அதனால், கட்சி நிர்வாகிகள் யாரும் கட்சி அலுவலகத்திற்கு வந்து என்னை பார்க்க கூடாது. நான் மாவட்டம், மாவட்டமாக வருவேன். அங்கே வந்து பார்த்துக்கொள்கிறேன். ஏன் இங்கே வருகிறீர்கள் என்று சொல்கிறார்.

 இவர் பதவியில் ஒரே சாதனையாக சொன்னது. பொள்ளாச்சி மீட்டிங் தான். பொள்ளாச்சி மீட்டிங்கை பிரமாண்டமாக நடத்தி விட்டேன் என்று மேலிடம் வரை சொன்னார். ஆனால், இவர் எந்த அளவுக்கு கூட்டத்தை கூட்டினாரோ, அதை விட அதிகமாக பொள்ளாச்சியில் எதிர்க்கட்சியில் இருந்து ஆட்களை பிடித்து திமுகவில் சேர்த்து விட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதோடு திமுக தொண்டர்கள், பொதுமக்களும் திரண்டதால், அந்த நிகழ்ச்சி மாநாடு போல அமைந்து விட்டது. இதனால் கோவை மாவட்டமே ஸ்தம்பித்து விட்டது. அதனால் இப்போது பொள்ளாச்சி கூட்டத்தையும் அவரால் சொல்ல முடியவில்லை. செந்தில் பாலாஜி அந்த ரெக்கார்டை உடைத்து விட்டார்.

அதனால், தான் அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது எரிந்து, எரிந்து விழுகிறார். தன்னெழுச்சியாக கூட்டம் பாஜவுக்கு வந்ததே கிடையாது. ஆனால், திமுகவுக்கு வந்தது தன்னெழுச்சி கூட்டம். திமுகவின் கூட்டத்தை பார்த்து அண்ணாமலையை கட்சிக்காரர்களே நக்கலாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சுற்றுப்பயணம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது தவிர வேறு எதையும் அண்ணாமலை செய்வதில்லை. கட்சிக்காரர்களை மதிப்பது இல்லை. இதனால் தொண்டர்களும், மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். எல்.முருகனை மாநில தலைவராக நியமித்த போது, 20 வருடமாக கட்சியில் எம்எல்ஏவே இல்லாத நிலையை மாற்றி கட்சிக்கு 4 எம்எல்ஏக்களை கொண்டு வந்தார்.

ஆனால், அண்ணாமலையால் உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டிய சூழ்நிலைதான் ஏற்பட்டது. அதிமுகவுடன் சேர்ந்து இருந்தால் ஒரு சில இடமாவது உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு கிடைத்து இருக்கும். தனித்து போட்டி என்று சொல்லி நிறைய இடங்களில் பாஜவுக்கு டெபாசிட்டே இல்லாமல் போனது. அதிகாரத்தில் இருந்தால் ஏதாவது செலவு பண்ணலாம். அண்ணாமலையின் தனித்து போட்டி முடிவால் இதுவும் நடக்காமல் போனது. அவர் மக்கள் பிரதிநிதியாக இல்லாததால், மற்றவர்களும் பதவியில் இருக்க கூடாது என்று நினைத்து காலி பண்ணிவிட்டார் என்றும் கட்சியினர் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி அதிரடி முடிவு என்ற பெயரில் எடுத்தேன், கவிழ்த்தேன் முடிவை எடுத்ததால் மண்ணை கவ்வ வேண்டியதாகி விட்டது. இப்படியே போனால், அடுத்த சட்டசபை தேர்தலில் செலவு பண்ண மத்தியில் இருந்து பணம் வரலாம். ஆனால், இங்கே போட்டி போட கூட யாரும் இருக்க மாட்டார்கள். கொடுக்கிற பணத்துக்கு ஆசைப்பட்டு போட்டி போட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் அனைவரும் ஓட தான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு பாஜ உள்ளது. இதை ஒன்றிய பாஜ உடனே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள். இதனால், டெல்லி தலைமைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. புகார்கள் தொடர்பாக விரைவில் கட்சி மேலிடம் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் ஓவர் அட்ராசிட்டி பற்றி தலைமைக்கு புகார்கள் பறந்ததால் தான், இப்போது தமிழக பாஜவில் இரட்டை தலைமையை டெல்லி மேலிடம் கொண்டு வந்துள்ளது.

* சமூக விரோதிகளின் கூடாரம்

இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் மாநில பாஜ தலைவர்களாக இருக்கும்போது கட்சிக்கு மரியாதை இருந்தது. இப்போது அந்த மரியாதை தலைகீழ் ஆகிவிட்டது. கட்சிக்குள்ளே சீனியர்களை ஓரம்கட்டியதால் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரவுடி, சமூக விரோதிகளுக்கான கூடாரமாக பாஜ மாறிக்கொண்டு வருகிறது. அதனால், கட்சி கலகலத்து போய் இருக்கிறது. மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன் போன்றவர்கள்  எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள். இவர்கள் எல்லாம் மனவருத்தத்தில் இருக்காங்க. கே.டி.ராகவனை ஓரம் கட்டுவதற்கு மிகப்பெரிய அளவில் முயற்சி நடந்தது. பாலியல் விவகாரத்தில் சிக்கி அவர் ஓரம்  கட்டப்பட்டார்.

Related Stories: