×

மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதித்த தடை நீட்டிப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராக கூடாது என தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.  இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்ததுடன், வேலுமணி மனு மீதான இடைக்கால உத்தரவுக்காக  விசாரணையை தள்ளி வைத்திருந்தது. இதற்கிடையில் ஆட்சேபங்களை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

 இந்த நிலையில் நேற்று வேலுமணி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் மனுவை விசாரிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு வலியுறுத்தினார். ஆனால் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

* உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கு தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்த எதிர்ப்பை  உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘எஸ்.பி.வேலுமணி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முதலில் தனது இடைக்கால உத்தரவை பிறப்பிக்கட்டும். அந்த உத்தரவை பார்த்து விட்டு இந்த மனுவை விசாரிக்கலாம். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு, இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது,’ என கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags : Former Minister ,S.P. ,Anti-Corruption Bureau ,Velumani ,Chennai High Court , Former Minister S.P. Extension of ban on submission of final report by Anti-Corruption Bureau in tender rigging case against Velumani: Chennai High Court order
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்