சசிகலா தம்பி திவாகரனுடன் எடப்பாடி ஆதரவாளர் காமராஜ் சந்திப்பு: டெல்டாவில் பரபரப்பு

சென்னை: சசிகலாவின் தம்பி திவாகருடன் எடப்பாடியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ், இரு நாட்களுக்கு முன்னர் மன்னார்குடியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் சந்தித்துப் பேசியது டெல்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதனால் எடப்பாடி அணியில்தான் பெரும்பாலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பன்னீர்செல்வம் அணியில் 4 எம்எல்ஏக்கள் 2 எம்பிக்கள் மற்றும் சில நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர்.

இந்தநிலையில் எடப்பாடி அணியில் உள்ள நிர்வாகிகளை இழுக்கும் பணியை ஓ.பன்னீர்செல்வம் செய்து வருகிறார். அதேநேரத்தில் சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி அணியின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சரும் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜ், கடந்த சில நாட்களாக நடுநிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னைக்கு வருவதை அவர் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காமராஜ், கண்டிப்பாக அவரை வரவேற்கும் போஸ்டர்கள், பேனர்களில் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் படத்துடன், ஓ.பன்னீர்செல்வம் படத்தையும் சேர்த்து போட வேண்டும் என்று உத்தரவிடுகிறாராம்.

இதனால் அவரை வரவேற்கும் போஸ்டர்களில் இருவரும் படமும் இடம்பெறுகிறதாம். குறிப்பாக அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அறிவித்த தீர்ப்புக்குப் பிறகு அவரது நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். அதோடு, அதிமுக மற்றும் உறவினர் நிகழ்ச்சிகளில் திவாகரனுடன் சேர்ந்து கலந்து கொள்கிறாராம். அப்போது இருவரும் தனித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது டெல்டாவில் உள்ள அதிமுகவினர் மத்தியில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Related Stories: