×

கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்கவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கல்வி அனைவருக்கும் கட்டாயம் இலவசமாக வழங்கப்பட வேண்டுமென நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனியைச் சேர்ந்த ஜெயபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தனர். கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் விண்ணப்பம் செய்யுமாறும், பிறகு கட்டணம் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், ‘‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் பின்புலத்தை பார்க்காமல் மதிப்பெண்ணை மட்டுமே பார்க்கின்றனர். அவர்களது முழு கல்விச்செலவையும் அரசு ஏற்றுக் கொள்கிறது. கல்வி என்பது மாணவர்களுக்கு கட்டாயம் இலவசமாக வழங்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் சூழலும், கல்வி நிலையம் நடத்தும் முதலாளிகள் உயர்ரக கார்களிலும் பயணிக்கும் சூழல் உள்ளது’’ என்றனர். பின்னர் மனுவிற்கு, தமிழக உயர் கல்வித்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : ICourt Branch Judges , Education should be made free for all: ICourt Branch Judges opin
× RELATED அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதில்...