×

காக்ரா - ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து இந்திய, சீன படைகள் 12ம் தேதிக்குள் வாபஸ்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் காக்ரா - ஹாட் ஸ்பிரிங்கில் இருந்து 12ம் தேதிக்குள் இந்திய, சீன ராணுவம் திருப்பப் பெறப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் ராணுவம் ஊடுருவியதால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் பதற்றத்தை  தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஜூலையில் நடந்த 16ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, காக்ரா-ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இந்த பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவமும் நேற்று முன்தினம் மாலை முதல் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.  
இது தொடர்பாக இந்திய  வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘வரும் 12ம் தேதிக்குள் காக்ரா - ஹாட் ஸ்பிரிங் ரோந்து பகுதியில் இருந்து இந்திய, சீன படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடையும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவும், எஞ்சியுள்ள பிரச்னைகளை தீர்க்கவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவும், சீனாவும்  ஒப்புக் கொண்டுள்ளன,’ என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Ministry of External Affairs , Indian, Chinese forces to withdraw from Khagra-Hot Spring by 12th: Ministry of External Affairs
× RELATED சீனாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!