திரிஷாவுக்கு தம்பியாக நடித்தது ஏன்?: ஜெயம் ரவி விளக்கம்

சென்னை: மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30ம் தேதி வெளிவருகிறது. இதில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்துள்ளர். அவரது அக்காவாக குந்தவை கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். இது குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: நானும் திரிஷாவும் 3 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறோம். எங்களது லவ் கெமிஸ்டரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் திடீரென்று பொன்னியின் செல்வனில் அக்கா, தம்பியாக நடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆரம்பத்தில் எங்களுக்கு தயக்கம் இருந்தது உண்மைதான். ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற பயமும் இருந்தது.

இதை உணர்ந்து கொண்ட மணிரத்னம், இந்த படத்தை பொறுத்தவரை நீங்கள் இருவரும் குந்தவை, அருண்மொழி வர்மன் கேரக்டராக இருங்கள், படம் முடிகிற வரை அந்த எண்ணத்தோடு வீட்டிலும் இருங்கள். முந்தைய படங்களை மறந்து விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தோம். அதன்பின் தயக்கம் நீங்கியது. பொன்னியின் செல்வன் கதையில் முழ்கி ரசிகர்கள் படம் பார்க்கும்போது எங்களின் பழைய படங்களை ரசிகர்கள் மறந்து எங்களை குந்தவை, அருண்மொழி வர்மனாகத்தான் பார்ப்பார்கள்.பிரமாண்ட படத்தில் நடித்தால் அடுத்த படமும பிரமாண்டமாக இருக்க வேண்டும். பல நடிகர்கள் பிரமாண்டத்துக்குள் சிக்கி இருக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னார்கள். எனக்கு அந்த பயம் சிறிதும் இல்லை. காரணம் பிரமாண்டம் என்பது அந்த கதைக்குதானே தவிர எனக்கு இல்லை.

நல்ல படம்தான் எனது இலக்கே தவிர பிரமாண்டம் அல்ல. எந்த கேரக்டர்களையும் நான் தேடிப்போவதில்லை. நல்ல கேரக்டர்கள் என்னை தேடி வருகிறது. பொன்னியின் செல்வன் பிரமாண்ட நாவலாச்சே. எம்.ஜி.ஆர், கமல் போன்றவர்களே முயற்சித்தும் முடியாத விஷயமாச்சே, சரித்திர படம் எடுத்து பழக்கமில்லா மணிரத்னம் எப்படி செய்வார் என்கிற சந்தேகம் சிலருக்கு உண்டு. ஆனால் மணிரத்னத்தின் அர்ப்பணிப்பு, நடித்தவர்களின் உழைப்பு, ஒட்டுமொத்த குழுவின் நம்பிக்கை அந்த சந்தேகத்தை போக்கிவிட்டது.

Related Stories: