ரூ.125 கோடியில் தூர்வாரப்படும் மதுராந்தகம் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் மிகப்பெரியது மதுராந்தகம் ஏரி. இந்த ஏரி 50 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஏரியின் மொத்த உயரமான 23.3 அடியில் 10 அடிக்கு மேல் மண்ணால் தூர்ந்து காணப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் மதுராந்தகம் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டினாலும் அடியில் மண் சேர்ந்திருப்பதால் மழை நீரை கூடுதலாக சேமிக்க முடியாமல் ஏரி நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக சென்று கலந்து வந்தது. இதையடுத்து, மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து ஏரியை தூர் வார தமிழக அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி மதுராந்தகம் ஏரியை தூர்வாருவதற்கான பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. ரூ.120 கோடி செலவில் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் மற்றும் பாசன கால்வாயை சீரமைத்தல் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மதுராந்தகம் ஏரி மழைக்காலத்தில் முழுவதும் நீர் நிரம்பி காணப்படும்போது கடல்போல் காட்சியளிக்கும். இதனால், இந்த ஏரியை கண்டு ரசிப்பதற்காகவே ஏராளமான மக்கள் வந்துசெல்வது வழக்கம். மேலும், இந்த ஏரி நிரம்பி வழியும்போது தண்ணீர் கொட்டும் அழகை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்துசெல்வது உண்டு. இந்த ஏரியில் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும், தூர் வாரி முடித்தவுடன் நீர் பிடிப்பின் அளவு கூடும். இதனால், வருடம் முழுவதும் ஏரி கடல்போல் காணப்படும். எனவே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, நாள்தோறும் லட்சக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர். இவர்களுக்கென்று, இச்சாலையில் தனியாக சுற்றுலாத்தலம் இல்லை. இந்த குறையை போக்குவதற்கு, மதுராந்தகம் ஏரியை சுற்றுலா தலமாக்க மாற்றி படகு குழாம் அமைக்க வேண்டும். மேலும், படகு சவாரி, நடைபயிற்சி பாதை, தியான மேடை, சிறுவர்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல், உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அப்படி அமைந்தால், தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், பஸ் பயணியர், ஏரியின் அழகை இனி பார்த்து ரசித்தபடியே பயணிக்கலாம். இது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா  பயணிகளுக்கும்  சிறுவர், சிறுமியருக்கும் உற்சாகம் தரும் வகை

யில்  இப்பகுதியும் விளங்கும் என்பதில் மாற்றம் இல்லை. தற்போது, இந்த  ஏரி பல கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு வரும் நிலையில் படகு குழாம்  அமைப்பதற்கான பணிகளையும் சேர்த்து செயல்படுத்தினால் படகு குழாம் அமைக்கும்  பணிகள் விரைவாக நடந்து முடியும். எனவே செங்கல்பட்டு மாவட்ட அதிகாரிகள்  இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: