குன்றத்தூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூர்: குன்றத்தூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். குன்றத்தூர், வேம்புலியம்மன் கோயில் தெருவில் மிகவும் புராதானதுமான வேம்புலி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்த கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக கோயில் புதுப்பிக்கும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று காலை கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது ஊற்றி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்த புனித நீரை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பக்தர்கள் மீது தெளித்தார். குன்றத்தூர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதியில், கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: