×

மெரினா லூப் சாலையில் ஓராண்டுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்; போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மெரினா லூப் சாலையில் உள்ள வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்றி போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை காமராஜர் சாலை கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.55 கி.மீ. தூரம் மெரினா லூப் சாலை உள்ளது. இச்சாலையை ஆக்கிரமித்து சிலர் கடைகளையும், சிலர் தங்களது வியாபார பொருட்களையும் வைத்து இருந்தனர். கடந்த மாதம் 70 ஆக்கிரமிப்பு மீன் கடைகள் அகற்றப்பட்டன. இனி வரும் காலங்களில் மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மீன் விற்பனையாளர்களுக்கு என நொச்சிக்குப்பத்தில் ரூ.9.9 கோடியில் மீன்சந்தை அமைய உள்ளது. இந்த சந்தை அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 336 கடைகள் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.

புதிய மீன் சந்தையில் கழிவறைகள், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் கழிவு சேகரிப்பு ஆகியவற்றுடன் சுகாதாரமானதாக அமையும். போர்ஷோர் எஸ்டேட் கடற்கரை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். மேலும் குப்பை கொட்டுவதை தவிர்கவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடற்கரையில் உள்ள கழிவுகளை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். கடற்கரை அழகாகவும், சுகாதாரமானதாகவும், அனைத்து தரப்பு மக்களும் அணுகக்கூடியதாகவும் அமையும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன், லூப் சாலை வழக்கமான போக்குவரத்துக்கு உகந்ததாக இருக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாந்தோம் நெடுஞ்சாலையில் சில பள்ளிகள் உள்ளதால், பரபரப்பான நேரங்களில்  போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.

இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வியாபாரிகள் மற்றும் மீன் வாங்க வருபவர்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் அவ்வப்போது லூப் சாலையிலும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என சாந்தோம் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர். காலை மற்றும் மாலை என பரபரப்பான நேரங்களில் போக்குவரத்து மாற்றத்துக்கு லூப் சாலை பயன்படுகிறது. மீன் வளாகம் வந்தாலும் லூப் சாலையில் கடைகள் உள்ளன. ஒரு முறை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது.  பாண்டி பஜாரில் கடைகளுக்கான வளாகம் இருந்தும், நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



Tags : Marina Loop Road , Encroachments on Marina Loop Road to be cleared within a year; Corporation action to make it traffic-friendly
× RELATED சங்கரராமன் கொலை உள்பட 40 வழக்குகளில்...