நியூசி. ஏ அணியுடன் 2வது டெஸ்ட் இந்தியா ஏ 229/6

ஹுப்பாளி: நியூசிலாந்து ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. ஹூப்ளி, கர்நாடகா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது நாளான நேற்று டாஸ் வென்ற நியூசி. ஏ அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன் இருவரும் இந்தியா ஏ இன்னிங்சை தொடங்கினர். ஈஸ்வரன் 22 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன், ரஜத் பத்திதார் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

திலக் வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா ஏ 68 ரன்னுக்கு 4 விக்கெட் விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பிரியங்க் - கர் பரத் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தது. பிரியங்க் 87 ரன் (148 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 26 ரன் எடுத்து வெளியேற, 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. கர் பரத் 74 ரன், ராகுல் சஹார் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: