ஆசிய கோப்பை: இலங்கை பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில், இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 121 ரன்னுக்கு சுருண்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் இத்தொடரின் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றிகளைப் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்தியா (2), ஆப்கானிஸ்தான் (0) அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. நாளை நடைபெற உள்ள பைனலுக்கு ஒத்திகையாக அமைந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச முடிவு செய்தார். முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் பாகிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர்.

ரிஸ்வான் 14 ரன்னில் வெளியேற, பகார் ஜமான் 13, பாபர் 30 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். குஷ்தில் ஷா 4, இப்திகார் அகமது 13 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் முகமது நவாஸ் உறுதியுடன் போராட, ஆஸிப் அலி மற்றும் ஹசன் அலி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். உஸ்மான் காதிர் 3 ரன் எடுத்து தீக்‌ஷனா பந்துவீச்சில் ஹசரங்காவிடம் பிடிபட்டார். முகமது நவாஸ் 26 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். ஹரிஸ் ராவுப் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 19.1 ஓவரில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்கா 4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தீக்‌ஷனா, அறிமுக வேகம் பிரமோத் மதுஷான் தலா 2 விக்கெட், தனஞ்ஜெயா, சமிகா கருணரத்னே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

Related Stories: