×

திருப்போரூர் பேரூராட்சியில் சேறும் சகதியுமான சான்றோர் வீதி; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வணிகர் தெரு, சான்றோர் வீதி, நான்கு மாடவீதிகள், திருவஞ்சாவடி தெரு, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை, மடம் தெரு, பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்களின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தெருக்கள் குண்டும் குழியுமாக மாறி எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டு பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து. திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி குழாய்கள் புதைப்பு பணி முடிவுற்ற தெருக்களில் மீண்டும் சாலைகளை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, வணிகர் தெரு, திருவஞ்சாவடி தெரு, திரவுபதி அம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இவற்றில் சான்ேறார் வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட சில தெருக்கள் விடுபட்டு விட்டது. இதன் காரணமாக சான்றோர் வீதி, கிரிவலப்பாதை ஆகிய தெருக்கள் இன்னும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், சிறிய அளவில் மழை பெய்தாலும் வீதியெங்கும் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சான்றோர் வீதி மற்றும் கிரிவலப்பாதை ஆகியவற்றை மழைக்காலம் தொடங்குவதற்குள் சீரமைத்து புதிய சாலை அமைத்துத் தர ேவண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muddy Chandor Road ,Tiruporur Municipality , Muddy Chandor Road in Tiruporur Municipality; Public demand for repairs
× RELATED தண்டலம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை