×

மீஞ்சூர் அருகே பரிதாபம்; பைக் மீது லாரி மோதி தாய் கண்முன் மகன் பலி: டிரைவர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் ராஜா தோப்பு பகுதி சேர்ந்தவர் அழகர்சாமி(36), இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி மணி(32). இவர்களது மகன் சூர்யா(12). மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று மாலை சாந்தி மணி தனது மகனுடன் சென்னை அடுத்த மணலியில் உள்ள உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வல்லூர் 100 அடி சாலை அருகே வரும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில், நிலை தடுமாறி இவர்கள் கீழே விழுந்தனர். அப்போது, சூர்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில், படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். மேலும் சாந்திமணி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான சூர்யாவின் உடலை மீட்டு, பிரதேச பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சாந்திமணியை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவர் வைதிகமேடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Meenjoor , Pity near Meenjoor; Truck hits bike, son dies in front of mother: driver arrested
× RELATED மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு...