பிளவுபட்ட அதிமுகவில் தற்காலிக பதவியில் உள்ள எடப்பாடிக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை: அமைச்சர் பி.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: இரண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி, கோவில்பட்டி நிகழ்ச்சிகளை முடித்து, விருதுநகரிலிருந்து கார் மூலம் நேற்று முன்தினம் மாலை மதுரை வந்தார். மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கிய முதல்வர், நேற்று காலை மதுரையில் நடந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கலைஞர் அரங்கத்தில், மணமக்கள் பி.எம்.தியானேஷ் - எஸ்.ஸ்மிர்தவர்ஷினி திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அமைச்சர் மூர்த்தி எதிலும் முத்திரை பதிப்பார். இந்த திருமண விழாவையும், திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லும் மாநாடு போலவே நடத்துகிறார். அவர் ஒரு கல்லில் பல மாங்காய் அடிப்பவர். திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் அமைச்சர் பதவியை மூர்த்திக்கு தர முடிவானது. எனக்கு அச்சமிருந்தது. ஆனால், மூர்த்தி பதவி ஏற்ற பிறகு அந்த துறையை பெருமையின் சிகரமாக, நான் எதிர்பார்த்ததை  விட மிகச்சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

நான் ஏன் பயந்தேன் என்றால், நிதிப்பற்றாக்குறையில் அப்போது அரசு தவித்து வந்தது. ஆனால், எனது எதிர்பார்ப்பை விட அரசுக்கு வருவாயைப் பெற்றுத் தந்திருக்கிறார். பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 913 கோடி வருவாயை ஈட்டித் தந்திருக்கிறார். மேலும், பத்திர பதிவுத்துறையில் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கி, திங்கள்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்துகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை வசதி செய்துள்ளார். பிரிட்டிஷ் காலத்தில் பத்திரப்பதிவில் உயர்மேடை தடுப்பு வைத்திருப்பார்கள். அதனையும் அகற்றி விட்டார்.

70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து பத்திரப்பதிவு செய்து வருகிறார். கடந்த அதிமுக காலத்தில் நடந்த போலி பதிவுகளை ஒழிக்கும் வகையில், தற்போது ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற மாநில முதல்வர்கள் என்னை அணுகி, இந்த நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். பதிவுத்துறையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழக அரசு செய்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்டபோது வாக்குறுதி அளித்தோம். வாக்களித்தனர்.

இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் திமுக ஆட்சி மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சி வந்த பிறகு எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நான் போகும் இடமெல்லாம் இருபுறமும் சாலைகளில் மக்கள் நின்று மனு கொடுக்கின்றனர். ஒரு நிகழ்ச்சி முடித்து மற்றொரு நிகழ்ச்சிக்கு செல்லவே, அதாவது 15 நிமிடத்தில் செல்ல வேண்டிய தூரத்திற்கே 2 மணி நேரமாகிறது. கடந்த ஆட்சி காலத்தில் மனு அளிக்கும்போது, ‘இதையாவது செய்யுங்கள்’ என்று கொடுப்பார்கள். என்னிடம் மனு கொடுக்கும்போது நன்றியும் சேர்த்து சொல்கின்றனர், கோரிக்கையை உடன் நிறைவேற்றும் நம்பிக்கையில்தான் இந்த நன்றி வருகிறது. என் உடம்பை பார்த்துக் கொள்ளவும் மக்கள் வேண்டுகின்றனர்.

இப்படி நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும்போது சந்தடி சாக்கில் காமெடியை கட்டவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக எம்எல்ஏக்கள் தங்களிடம் பேசி வருவதாக அவர் பொய் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக எம்எல்ஏக்களே பேசுவதில்லை. அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. அவர் வகிப்பதே தற்காலிக பதவிதான். கெட்டதை திட்டமிட்டு செய்யும் பொய் பிரசாரத்தைப் பற்றி எங்களுக்கு கவலைப்பட நேரமில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி கண்டுள்ளது.

மக்கள் நன்மை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் மக்களை பற்றி நினைத்து பணியாற்றி வருகிறேன். இரண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் பழனிசாமிக்கு திமுகவை விமர்சிக்க தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருகிறோம். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

திருமண விழா நிகழ்ச்சியில்  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வரவேற்றார். மேலும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். நிகழ்ச்சி முடிந்ததும் பகல் 11.40 மணிக்கு மதுரையில் இருந்து முதல்வர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

* ‘மினிட் டூ மினிட் சிஎம்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில்,‘‘மதுரையில் விரைவில் கலைஞர் நூலகம்  திறக்கப்படும். ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானத்திற்கு இடம் தேர்வாகி இருக்கிறது. விரைவில் கட்டுமானம் தொடங்கும். கீழடியில் பண்பாட்டு மையம் திறக்கப்படுகிறது. சென்னையைப் போல பெருநகர வளர்ச்சிக்கழகம் மதுரையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ரிங்ரோடு அமைக்கும் பணியும் நடக்க இருக்கிறது. மதுரையில் மாநாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இப்படி மதுரைக்கு அடுத்தடுத்து வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.  என்னை நெல்லையில் ஒரு சுவரொட்டியில் ‘ஏ.எம், பி.எம் பார்க்காத சி.எம்’ என்று  போட்டிருந்தனர். ஆனால், நான் ‘எம்.எம் சி.எம்’ அதாவது ‘மினிட் டூ மினிட் சி.எம்’மாக இருப்பேன். சி.எம் நம்பர் ஒன் எனப்பெயர் எடுப்பேன். எல்லா அமைச்சர்களும் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றுகின்றனர்’’ என்றார்.

Related Stories: