2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்: அமெரிக்க மாஜி அதிபர் அறிவிப்பு

வாஷிங்டன்: வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூஜெர்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனைவரும் விரும்புகிறார்கள். அவ்வாறு நான் போட்டியிட்டால், பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

சிலருக்கு அதிருப்தியாக இருக்கலாம். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை நான் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு எனது மகள்  இவாங்கா டிரம்ப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யோசிக்கவில்லை’ என்றார். முன்னதாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியில் இருந்த போது, நாட்டின் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றதாக புகார்கள் எழுந்தது.

அதையடுத்து அவரது பண்ணை வீடுகளில் புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தின. அப்போது வெள்ளை மாளிகையின் பல ஆவணங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்திற்கும், டிரம்புக்கும் கடுமையான மோதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: