×

பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறு: பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி: பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் அதிமுக அரசின் மெத்தனத்தால் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் உள்ள கோபுரம் போன்றவை சீரமைப்பு, கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் பாலாலயம் செய்து 2 வருடங்களாகும்  நிலையில் பணிகள் விறுவிறுப்படையாமல் இருந்து வந்தது. திமுக ஆட்சி வந்தபின்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழநி கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கும்பாபிஷேக பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வரும் ஜனவரி மாதம் பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத்தொடர்ந்து தற்போது கும்பாபிஷேக பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோபுரங்கள் சீரமைப்பு, மண்டபங்கள் புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேக பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kumbabhisheka ,Palani Temple , Kumbabhishekam work at Palani temple in full swing: Devotees are happy
× RELATED பழநி பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோர் தரிசனம்