×

நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகன் 2வது நாளாக உண்ணாவிரதம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முருகன் 2வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தங்கியுள்ளார்.

இதற்கிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என்று சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க கோரி முருகன் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் நேற்று முதல் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

சிறை நிர்வாகம் வழங்கிய உணவை ஏற்க மறுத்து 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் பெண் சிறை அலுவலரிடம் ஒழுங்கீனமாக நடந்த கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து வி்சாரிக்க வேண்டும். விடுதலை வழங்க கோரி அளித்த மனுவும் நிலுவையில் இருப்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் உண்ணாவிரதம் இருப்பது தொடரபாக எழுத்துபூர்வமாக எந்த கடிதம் அளிக்கவில்லை. உணவுகளை அவர் தவிர்த்து வருகிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Murugan ,Vellore Central Jail , Murugan fasted for 2nd day in Vellore Central Jail for speedy trial of the pending case
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...