×

காற்று மாசு தடுக்க ஏற்பாடு; திருமலை-திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து; பிரம்மோற்சவம் முதல் இயக்கம்

திருமலை: காற்று மாசு தடுக்க திருமலை-திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்தை பிரம்மோற்சவம் முதல் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் காற்று மாசு தடுக்க எலக்ட்ரிக் பஸ்களை அதிக அளவில் இயக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக திருமலை-திருப்பதி இடையே அவற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பஸ்களை ஒலெக்டா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 9 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம், 12 அடி உயரம் கொண்ட இந்த பஸ்சில் 36 இருக்கை வசதி, ஏர் கண்டிஷன், சிசிடிவி கேமராக்கள், தானியங்கி கதவு அமைப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. ஒரு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கிலோமீட்டர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பஸ்சின் விலை சுமார் ₹2.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை-திருப்பதியில் இயக்க முதற்கட்டமாக 10 பஸ்கள் நாளை திருப்பதி வருகிறது. ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் சுவாமிக்கு முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்பிக்க உள்ளார். அதன்பின்னர் எலக்ட்ரிக் பஸ்களை தொடங்கி வைக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று முதல் திருமலையில் இருந்து திருப்பதி இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. முதற்கட்டமாக திருமலை-திருப்பதி இடையே 50 பஸ்களும், ரேணிகுண்டா விமான நிலையம்-காளஹஸ்தி பகுதிக்கென 50 பஸ்களும் என மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirumala-Tirupati ,Brahmotsavam , Provision to prevent air pollution; Electric bus service between Tirumala-Tirupati; Brahmotsavam is the first movement
× RELATED காரைக்கால் கயிலாசநாதர் கோயில்...