கழிவுநீர் தேக்கம்; துர்நாற்றம்; காஞ்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கிநிற்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் முகம் சுளிப்பதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட தலைநகராக விளங்குகிறது. கோயில்களின் நகரம், பட்டு நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. சிறப்புவாய்ந்த காஞ்சிபுரத்துக்கு சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்பட பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் சாமி தரிசனத்துக்காகவும், திருமணம், பண்டிகை போன்ற விழாக்காலங்களில் உடுத்த தனிச்சிறப்பு வாய்ந்த பட்டுப்புடவை கள் வாங்கவும் காஞ்சிபுரத்துக்கு வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், வேலூர், பெங்களூரு, சென்னை, மாமல்லபுரம், விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 726 பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் மழை பெய்தது. குறைந்தளவு மழை பெய்தாலே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கிவிடும்.

தற்போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து பாதாள சாக்கடை மேனுவல் வழியாக வெளியேறி தேங்கிநிற்கிறது. இதனால், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மழை காலங்களில் அடிக்கடி இதுபோன்று நடப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தேங்கிய கழிவுநீர் வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: